ஸ்ரீ ஞான வைரவர் கோயில் வரலாறு
பல தசாப்தங்களிற்கு முன்னர் எமது மூதாதைகளால் அரியாலை கொட்டையடி என்னும் பகுதியில் ஒரு நாவல் மரத்தின் கீழ் வைரவர் சூலம் ஒன்றை வைத்து வழிபாடுசெய்து வந்தனர். இவ்வாறு சூலத்தைத் ஸ்தாபித்தவர் யார் என்பது எம் முன்னாள் பரம்பரையினருக் கும் தெரியாமல் இருந்துள்ளது.
இவ்விடத்தில் “கொட்டையடி” என்பதன் அர்த்தத்தை வெளிப்படுத்துவது சாலவும் சிறப்பு என கருதுவதால் அதனை முன் வைக்கின்றேன். எமது மூதாதை யர்கள் பாரம்பரிய விளையாட்டுக்களான இலுப்பைக் கொட்டை அடித்தல். போர்த்தேங்காய் அடித்தல் போன்ற வற்றில் விற்பன்னர்களாக இருந்துள்ளனர். இதனால் இப்பகுதிக்கு அரியாலையின் ஏனைய இடங்களிலிருந்து இவ் விளையாட்டுக்களை விளையாட இளைஞர்கள் வந்திருந்தார்கள். அவர்கள் தாம் செல்லும் இடத்தை அடையாளப் படுத்த பேச்சு வழக்கமாக சொல்லிய இடப்பெயராக கொட்டையடி என்ற பிரதேசம் உருவாகியதாக கருதப்படுகிறது.
வைரவப்பெருமானின் அருளாட்சி யினால் இப்பகுதி மக்கள் யாவரும் சீரும் சிறப்பாக வாழ்ந்து வந்தனர். பெருமானின் மீது கொண்ட பக்தியால் பெருமானிற்கு பொங்கல், சிறப்புத் தினங்களில் விசேட தீபங்கள் ஏற்றுதல் போன்ற மரபுமுறை வழிபாடுகளைச் செய்து வந்தனர். பெருமானின் அருட்கடாட்சத்தை பெற்று சிறப்பாக வாழ்ந்து வந்த இம்மக்கள் பெருமானிற்கு ஆகம முறைப்படியான ஓர் ஆலயத்தை அமைத்து வழிபட விரும்பினர். பெருமான் சூல வடிவில் கோயில் கொண்டிருந்த வளவின் உரிமையாளரிடம் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர். அடியார்களின் விருப்பத்தை புரிந்துகொண்ட காணியின் உரிமையாளரான திரு.ஆறுமுகம் சுப்பிர மணியம் அவர்கள் தனது காணியில் ஆலயத்தை அமைக்க தனது விருப்பத்தை தெரியப்படுத்தி தானே முன்னின்று ஆலயத்தைக் கட்டுவித்தனர்.
மக்கள் கனவான் சுப்பிர மணியத்தின் உதவியுடன் வைரவப் பெருமான் கோயில் கொண்டிருந்த நாவல் மரத்தின்கீழ் சிறிய கோயில் ஒன்றை 1917ஆம் ஆண்டு கனவான் ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்கள் தனது காணியில் அமைத்தார். சூல வடிவில் இருந்த வைரவப்பெருமானை ஞான வைரவப் பெருமானாக மூலாலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். கோயிலை ஒழுங்கு முறைப்படி செயற்படுத்தும் பொறுப்பை யும் திரு.சுப்பிரமணியத்திடமே மக்கள் ஒப்படைத்தனர். அவர் ஆலயத்திற்கென ஒரு சிவாச்சாரியரை நியமித்து தினமும் காலையும் மாலையும் பூசைகள் நடை பெறச் செய்தார். மக்களும் வைரவப் பெருமானின் மீது அதிக பக்தி கொண்ட வர்களாகவும் பெருமானுக்கு அபிஷேகங் கள், பொங்கல்கள் செய்து திருவருளைப் பெற்று வாழ்ந்தனர். திரு.சுப்பிரமணியம் அவர்களும் பெருமான் மீது கொண்ட பெரும் பக்தியினால் ஆலயம் அமைந்த காணியின் முழுப் பரப்பளவையும் ஆலயத்திற்கென உபயம் செய்து 1940 ஆம் ஆண்டு உறுதி எழுதி வழங்கினர். பக்தர்களும் தங்கள் நேர்த்திக் கடன்களையெல்லாம் நிறைவேற்றி நல்லருள் பெற்று வந்தனர். பெருமானின் அருள்பிரவாகத்தை பெற்ற பக்தர்கள் ஆலயத்தையும் சிறிது சிறிதாக அபிவிருத்தி செய்து வந்தனர். இவ் ஆலயத்திற்கு முதல்முறையாக 1934 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று ஆலயம் ஆகம விதிப்படியான ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது. பின்னர் சில அபிவிருத்தி வேலைகளும் திருத்தங்களும் செய்யப்பட்டு 1954 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
திரு.ஆ.சுப்பிரமணியம் இயற்கை எய்தியதைத் தொடர்ந்து பொதுமக்களால் தர்ம கர்த்தா சபை உருவாக்கப்பட்டது. 1940 ஆம் ஆண்டு இது பாரிபாலன சபையாக யாப்பு நீதியாக உருவாக்கப் பட்டு இயங்கி வருகின்றது.
இப்பரிபாலன சபையின் முயற்சி யால் உள்வீதிப் புனரமைத்தல் உள் வீதி உருவாக்கம் முன் மண்டப உருவாக்கம் மணிக்கூட்டுக்கோபுரம் புனரமைத்தல் பிள்ளையார் முருகன், பரிவார மூர்த்தி களுக்கு சிறுகோவில் அமைத்தல் போன்ற அபிவிருத்திப் பணிகளால் ஆலயம் பெரிய ஆலயமாக மாற்றம் அடைந்தது. சிறப்பான உற்சவ மூர்த்தி, பிரதிரட்ஷணம் செய்யப்பட்டதை அடுத்து 1972 ஆம் ஆண்டு தொடக்கம் 10 நாட்கள் அலங்காரத் திருவிழா இடம்பெற்று வருகிறது. வேண்டிய வாகனங்கள் சிறப்பாக திருமஞ்சம், சப்பை ரதம் போன்றன அடியார்களால் அன்பளிப்பு செய்து அலங்காரத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
ஆலயத்தின் நித்திய நைவேத்திய பூசைகளை செய்வதற்கு நடுவில் ஐயா என்று அழைக்கப்பட்ட சிவஸ்ரீ ஐயா அவர்கள் பொறுப்பேற்றார். சிறப்பாக பூசை அபிஷேகங்களை நடத்தி அடியார்களிற்கு வைரவப் பெருமானின் திருவருள் கிடைக்க வழிகாட்டி வந்தார். அவரிற்குப் பின்னர் அவரது புத்திரரான சிவஸ்ரீ பாலசுப்பிரமணியக்குருக்கள் ஆலயத்தைப் பொறுப்பேற்று தந்தை வழியில் ஆலயத்தை சிறப்பாக நடத் தினர். அவரிற்குப் பின்னர் அவரது புத்திரர்கள் ஆலய பூசைகளையும் உற்சவங்களையும் சிறப்பாக நடத்தினர். எனினும் 1995 ஆம் ஏற்பட்ட இடப்பெயர்வு ஆலயக் குருக்களையும் வெளி யிடங்களிற்கு செல்ல வழிசமைத்தது. இதனால் இடப் பெயர்வின் பின் ஆலய பூசைகள் உற்சவங்களை நடத்த குருக்கள் தேடவேண்டிய நிலமை பரிபாலன சபைக்கு ஏற்பட்டது. தற்காலிக ஏற்பாடு களில் அர்ச்சகர்கள் ஆலயத்தை நடத்தி னாலும் நிரந்தர குருக்கள் தேவை இருந்தது. சிவஸ்ரீ தி.சங்கரராஜக் குருக்களும் அவரது புத்திரர்களும் ஆலயத்தைப் பொறுப்பெடுத்து கடந்த இருபது வருடங்களாக சிறப்பாக பூசைகளையும் உற்சவங்களையும் நடத்தி வருகிறார்கள். அவரது வழிகாட்டல் பரிபாலனசபைக்கு ஆலயத்தை சிறப்பாகப் பராமரிக்க உதவியாக இருக்கின்றது.