அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாறு.
அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள சிறந்த புண்ணியஸ்தலங்களில் ஒன்றாகும். இதில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் சித்தி விநாயக விக்கிரகம் மிகவும் பழமை வாய்ந்தது. இத்திருக்கோயில் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கு முன் பெரிய பிரக்ராசிரியார் என்று கொண்டாடப்பட்ட ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளை அவர்களால் திரும்பவும் புதிதாகக் கட்டுவிக்கப்பட்டு ஆங்கில வருடம் 1915 இல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
சித்தி விநாயக விக்கிரகம் இந்தியாவிலுள்ள தொண்டை நாட்டிலிருந்து யாழ்பாடியின் காலத்தில் அவரின் முதலமைச்சர் சேதிராயரின் வேண்டுகோளின் படி கச்சிக் கணேசையர் என்னும் பிராமணோத்தினரால் கொண்டு வரப்பட்டது. என்றும் அதுவெ இப்போது அரியாலையிலுள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டிருப்பது போலும். என்று யாழ்ப்பாணச் சரித்திர நூலாசிரியருள் ஒருவரான ஸ்ரீமான் ஆ.முத்துத்தம்பிப்பள்ளை அவர்கள் கூறிப்போந்தார். (யாழ்ப்பாணச் சரித்திரம் பக்கம் 11)
யாழ்ப்பாடியின் காலம் கி.மு 2ஆம் நூற்றாண்டு சில சரித்திர நூலாசிரியர்கள் கூறி நிற்ப வேறு சிலர் அதனை மறுத்து கி. பி 10 ஆம் நூற்றாண்டு என்று வரையறுத்துள்ளனர். பிந்தியோர் கூற்றிலிருந்து பார்த்தாலும் கச்சிக் கணேசையரால் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயகர் விக்கிரகம் இற்றைக்கு ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தில் பிரதி;ட்டை செய்யப்பட்டு விட்டது என்பதற்கு சந்தேகமே இல்லை. ஆனால் அது அப்போது பிரதிட்டை செய்யப்பட்ட இடம் எது என்பது திட்டவட்டமாகக் கூறுவதற்கில்லை. இப்போது அவ்விக்கிரகம் இருக்கின்ற அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்தி விநாயகர் கோவிலிலே அவ் இடம் எனச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.
யாழ்ப்பாடியின் இராசதானி யாழ்ப்பாணமாய் இருந்தாலும் அவரின் முதலமைச்சர் சேதிராயரால் சித்தி விநாயகருக்கு ஓர் ஆலயம்; கட்டுவிக்கப்பட்டமையாலும் அவ்வாலயம் யாழ்ப்பாண இராசதானியிலே அல்லது அதற்கு அயலிலே கட்டுவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்று துணிதல் பொருத்தமுடையதாகும்.
யாழ்ப்பாண நகரப்பகுதியிலெ அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலைப் போன்ற பழமையான வேறோர் சித்தி விநாயகர் கோயில் இல்லாமையாலும், அரியாலை சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விநாயக விக்கிரகத்தின் அங்க அமைப்புக்கள் யாவும் பழங்காலச் சிற்பங்களோடு ஒத்திருப்பதனாலும் கச்சிக் கணேசையராலும் கொண்டு வரப்பட்ட சித்தி விநாயக விக்கிரகம் அரியாலை ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் விக்கிரகமே எனத் துணிதல் சாலும்.
யாழ்பாடியின் பின் யாழ்ப்பாணம் சிலகாலம் அரசற்ற நாடாயிருந்து பின்னர் கி.பி 16 ம் நூற்றாண்டு வரையும் சிங்கை ஆரிய மன்னர்களாலும், ஈற்றில் சங்கிலி அரசனாலும் ஆளப்பட்டது. இக்காலத்தில் சைவசமயமும் சைவக்கோயில்களும் சிறப்புற்று விளங்கின. அதன் பின்னர் பறங்கியராலும் ஆங்கிலேயராலும் ஏறக்குறைய நான்கு நூற்றாண்டு காலம் ஆளப்பட்டது. சங்கிலி அரசனின் ஆட்சிக்குப்பின் அதாவது பறங்கியர் ஆட்சி ஆரம்பித்த போது சைவக் கோயில்கள் பெரும்பாலும் தரைமட்டமாக்கப்பட்டன. நல்லூரில் சிறப்புற்று விளங்கிய கைலைநாதர் கோயில் இருந்த இடம் தெரியாது அழிக்கப்பட்டதென்று சொல்லப்படுகின்றது. அக்காலத்தில் சித்தி விநாயகர் கோயில் இடிபடாது தப்பியிருப்பது எங்ஙனம்.
சங்கிலியன் போர் தொடுக்க மன்னாரிலிருந்து புறப்பட்டு வந்த பறங்கியரின் படை பூநகரியிலிருந்து வள்ளங்களிலின் மூலம் சாவகச்சேரியை அடைந்து நாவற்குழியில் இரவு தங்கி அடுத்தநாள் உப்பாற்றைக் கடந்து சுண்டிக்குழியிற்றங்கிப் போர் செய்ததென்று யாழ்ப்பாணச்சரித்திரம் கூறுகின்றது. (யாழ்ப்பாணச் வைபவ சோமுதி பக்கம் 95 பார்க்க) எனவே சித்திவிநாயகர் கோயில் பறங்கியர் சென்ற பாதையில் இருந்தமையால் அஃது பறங்கியர் அட்டூழியத்தினின்றும் தப்பியிருக்க முடியாது.
சங்கிலி மன்னன் மன்னாரிலிருந்த கத்தோலிக்கருக்குச் செய்த கொடுமைகளுக்குப் பழிக்குப்பழி வாங்காது விடமாட்டார்களென்று உணர்ந்த பிராமணர்களிற் சிலர் தத்தம் கோயில்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் விக்கிரகங்களையும் அப்புறப்படுத்தி விட்டு அதாவது சனநடமாட்டமில்லாத இடங்களில் மறைத்து வைத்து விட்டு தாமும் ஓடி ஒளித்திருப்பார்கள். அல்லது தமது தாய் நாடாகிய இந்தியாவுக்கே சென்றிருப்பார்கள். என்பதை சொல்லவும் வேண்டுமா? சித்திவிநாயகர் விக்கிரகமும் இவ்வாறே மறைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கத்தாட்சியாக இப்பகுதியில் கர்ண பரம்பரையாகப் பேசப்பட்டு வரும் வரலாறு ஒன்றுள்ளது. அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்று வழங்கப்படும் புண்ணிய பூமியில் மாடு மேய்த்து வந்த சிறுவர்கள் தாங்கள் கொண்டு சென்ற மாடுகளை மேயவிட்ட பின்னர் கூடி விளையாடுவது வழக்கம் என்றும் ஒருநாள் அவர்கள் விளையாடும் போது தற்செயலாகப் பற்றையொன்றினுள் சித்திவிநாயகர் விக்கிரகம் ஒன்றைக் கண்டெடுத்தார்கள் என்றும் அதன் பின்னர் அந்த விக்கிரகத்தை வைத்து சுவாமி விழளையாட்டை விளையாடி வந்தனர் என்றும் அதனை அறிந்த பெரியோர்கள் அவ்விடத்திலேயே சித்திவிநாயகருக்கு ஓர் கோயில் கட்டுவித்தார்கள். என்றும் பேசப்பட்டு வருவதே அவ் வரலாறு ஆகும்.
அரியாலை நீர்நொச்சித்தாழ்வு என்னும் புண்ணிய பூமியில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ சித்திவிநாயகர் விக்கிரகம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மை வாய்ந்ததென்றும் நமது முன்னோர்கள் அதனைப் பேணிப்பாதுகாத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்த வழிபட்டு வந்தார்கள். என்றும் அன்று தொட்டு இன்று வரை நித்திய நைமித்திய பூசைகளை ஆற்றி இஷ்ட காமிய மோட்சார்த்தங்களைப் பெற்று வந்தார்களென்றும் அப்பெருமானின் பேரருட்டிறத்தால் அரியாலையூர் எல்லா வகையிலும் சிறந்து விளங்குகிறது என்றும் சொல்லப்படுகின்றது.
சித்திவிநாயகப்பெருமான் கோயில் கொண்டிருக்கும் இடத்தில் என்றும் வற்றாத நிலக்கீழ் நன்னீர் ஊற்றுக்கள் உள்ளன. இப்போதுள்ள வெளிவீதி நான்கிற்கு இடையிலுள்ள ஆறு கிணறுகளும் அவ்வீதிகளின் புற ஓரங்களிலுள்ள ஆறு கிணறுகளும் அமிர்தம் போன்ற நன்னீரை உடையன. இவற்றுக்கு அப்பாலுள்ள கிணறுகள் நன்னீரை உடையனவல்ல. இதொன்றுமே ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் ஸ்தலத்தின் விசேடத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
ஸ்தூபி கோபுரம் முதலியவற்றை உடையாதாய் சைவாகம விதிப்படி கட்டப்பட்டிருந்த சித்திவிநாயகர் ஆலயம் பாழடைந்த நிலையில் இருந்த போதிலும் மூன்று கால நித்திய பூசைகளும் வருடாந்த மகோற்சவம், பிள்ளையார் கதை, திருவெம்பாவை, சதுர்த்தி முதலிய நைமித்திய பூசைகளும் நடைபெற்று வந்தன. விசேஷமாக கந்த புராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருவாதவூரரடிகள் புராணம் என்பன படித்தும் பயன் சொல்லப்பட்டும் வந்தன. ஆனால் காலக் கழி காரணமாகவும் பராமரிப்புக் குறைவினாலும் தூபி முதலியன பாழடைந்திருந்தன. கோயிற்காணிகள் யாவும் வருமானமற்ற தரிசு நிலங்களாகவும் பற்றைக்காடுகளாகவும் இருந்தன. 1900 ஆண்டளவில் இக் கோயிலை நிர்வகித்து வந்த நிருவாக சபையாரும் பஞ்சகர்த்தாக்களும் இதனைப் புதுப்பித்துக் கட்டக்கூடிய பொருளாதாரம் இருக்காத காரணத்தினாலும் கோயில் நிர்வாகத்தை வேறு சிலர் கைப்பற்ற முயற்சித்ததனாலும் ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளைளவர்கள் இதனை கட்டுவிக்கக் கூடிய இடம், பொருள், ஏவல் முதலியனவும் நன்மதிப்பும் வாய்க்கப்பெற்ற வராய் இருந்தமையாலும் அவரை அணுகி சித்திவிநாயகர் கோயிலைப் புதுப்பித்துக் கட்டும்படி கேட்டுக் கொண்டனர். அவர்களின் ஒரேயொரு நோக்கம் சித்திவிநாயகர் சிறப்புற விளங்க வேண்டுமென்பதே.
ஸ்ரீமான் காசிப்பிள்ளையவர்களும் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்கி மூலஸ்தானம் தொடக்கம் கொடிஸ்தம்பம் ஈறாக பாரிய வெண்கற்களால் பன்னூறாண்டுகள் அழியாதிருக்கத்தக்கதாய் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் பொருந்திய திருக்கோயிலையும் அதனோடிணைந்த வசந்த மண்டபம், வைரவர் கோயில், சண்டேஸ்வரர் கோயில் மடைப்பள்ளி முதலியவற்றையும் கட்டுவித்து 1915ம் ஆண்டில் கும்பாபிஷேகமும் செய்வித்தார். அத்துடன் நித்திய பூசைகள் தளப்பமின்றி நடைபெறும் பொருட்டு கோயிற்காணிகளைத் திருத்தி வருமானம் வரத்தக்கதாகச் செய்தனர். அவ் வருமானத்தைக் கொண்டே ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலும் அதன் அருகில் பின்னர் கட்டப்பெற்ற தியாகராசப்பெருமான், இராசஇராஜேஸ்வரி அம்பாள் கோயில்களும் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீமான் விஸ்வநாதர் காசிப்பிள்ளையவர்கள் செய்த இப்பாரிய திருப்பணிகளை உத்தேசித்து அப்போதிருந்த நிருவாகசபையினரும் பஞ்சகர்த்தாக்களும் ஸ்ரீ சித்தி விநாயகப்பெருமான் கோயிலையும் அப்போது வேறோர் இடத்துக் கட்டப்பெற்றுக் குறையாக இருந்த தியாகராசப் பெருமான் கோயிலையும் அவை இரண்டிற்குமுரிய ஆதனங்களையும் பராமரிக்கும் உரிமையை 1916 ஆம் அவருக்கு உறுதிமூலம் எழுதிக் கொடுத்து விட்டனர். அன்று தொட்டு இன்று வரையும் அவரின் சந்ததியாரும் அல்லது சாட்டுதல்காரரும் இக்கோயில்களை நிர்வகித்து வருகின்றனர். இவர்களின் நிர்வாகத்தில் முன் மண்டபங்களும், உள்வீதி மண்டபங்களும், தியாகராஜப் பெருமான், இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில்களும் புறவீதிச் சுற்றுமதிலும், சித்திரத்தேர், தேர்முட்டி என்பனவும் கட்டப்பட்டுள்ளன. நித்திய நைமித்திய பூசைக் கிரமங்களும் சீரடைந்துள்ளன. இவற்றிற்கெல்லாம் ஊரவர்களின் ஒத்துழைப்பு பெருந்துணையாக இருந்தது.
ஸ்ரீ சித்திவிநாயகப் பெருமானின் பெருங்கருணைத் திறத்தினைப் பற்றி அவரை மெய்யன்போடு வழிபடும் அடியவர்களே அறிவர். எத்தனை எத்தனை ஆன்மகோடிகளை எம்பெருமான் தன்வயப்படுத்தி அருளினரோ! அவரை வழிபடும் அடியார் கூட்டமும் அவருக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளும் வரவ ர அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அவரின் பேரருள் திறத்தினால் ஊர்மக்கள் மனமுவந்து உதவிய நிதியைக் கொண்டு எம்பெருமான் ஆலயத்தை அணிசெய்து நிற்கும் ஐந்து வாயில்களையுடைய இராஜகோபுரமும் மணிக்கோபுரமும் முற்றுப்பெற்றுள்ளன.