அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வரலாறு
அரியாலை பிரப்பங்குளத்தை அடுத்து மேட்டு நிலம், பிரப்பங்குளத்தின் தெற்குப்பக்க நிலப்பகுதியில் மருத மரங்கள், வில்வ மரங்கள், நெல்லி மரங்கள் போன்ற தல விருட்சங்களுடன் தென்னை, பலா, கமுகு போன்ற மரங்களும் ஆங்காங்கு காணப்பட்டன. குளத்தின் அருகே பிரம்பு, மூங்கில், விளாத்தி, கொண்டல், தர்ப்பைப் புதர்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.
இவ்வூர் மக்கள் வயலில் நெல், சிறுதானியமும் தோட்டத்தில் புகையிலை, வாழை, மரவள்ளி போன்ற பயிர்வகைகளை விளைவித்து தமது சீவியத்தை நடாத்தினர். கடவுள் வழிபாட்டிலும், சைவ சமய அனுட்டானத்திலும் நம்பிக்கையும் ஈடுபாடும் கொண்ட வாழ்க்கை நெறியைப் பின்பற்றினார்கள்.
இக்கோவிலின் வரலாறு பற்றி ஓர் கர்ணபரம்பரைக் கதை தொன்றுதொட்டு செவி வழியாகத் தலைமுறை தலைமுறையாக இவ்வூர் மக்களால் பேசப்பட்டு வருகின்றது. பிரப்பங்குளத்தை அண்டிய மேட்டு நிலத்தில் சிறுவர் சிறுமியர் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு நாள் அவர்கள் களைப்படைந்ததால் இளநீர் குடித்துக்கொண்டிருக்கும்போது ஒரு கிழவி பொல்லை ஊன்றிக்கொண்டு வந்து ”மக்களே எனக்குத் தாகமாக இருக்கின்றது இளநீர் தாருங்கள்” என்று கேட்க, சிறுவர்கள் இளநீரை ஆச்சியிடம் கொடுத்துவிட்டு தமது மாடுகளை பார்க்கச் சென்றுவிட்டார்கள். பிறகு வந்து பார்த்தபோது கிழவியைக் காணவில்லை. ”நாச்சி” ”நாச்சி” ”நாச்சி” என்று மூன்று தரம் கேட்டது. சிறுவர்கள் திகைத்துவிட்டனர். இன்னும் ஒரு தினத்தில் சிறுவர்கள் கால்நடைகளை மேய்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு அழகான பெண் தலைவிரிகோலமாக வந்து நிற்பதைப் பார்த்து சிறுவர்கள் அவரைப் பார்த்துப் பயத்துடன் உங்களுக்கு என்ன என்று கேட்டார்கள். வந்தவர்களுக்கு தலையைக் காட்டினார். சிறுவர்கள் ஆவலோடு பார்த்தார்கள். தலையெல்லாம் கண்கள் இருக்கக் கண்டு திகைத்தனர், பயந்தனர். வந்த பெண் ”நாச்சியார் ஆலயம்” என்று கூறிக்கொண்டு மறைந்துவிட்டார். இச்சம்பவம் காட்டுத்தீபோல் ஊரெல்லாம் பரவியது. ஊரவர் கூடி ஆலோசித்து பனையோலையால் வேயப்பட்ட ஆலயம் ஒன்றை சின்னத்தம்பி உமையாச்சிக்கு சொந்தமான காணியில் 1824 ஆம் ஆண்டு பங்குனி மாதம் பூச நட்சத்திரத்தன்று அம்மன் விக்கிரகம் வைத்து நாச்சியார் கோவில் என்று அழைத்து வழிபாட்டிற்குரிய தலமாக்கினர்.
1924இல் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் இக்கோவில் கற்கோவிலாக புணர்நிர்மாணம் செய்யப்பட்டது. ஸ்தூபி, மூலஸ்தானம், மண்டபம், மடப்பள்ளி, கிணறு ஆகியன அமைக்கப்பட்டது. புன்னை மரத்தடியில் வைரவர் சூலம் நாட்டப்பட்டு வழிபடப்பட்டது. கருங்கல்லில் அம்பாளுக்கு சிலை உருவாக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு சகல ஆகமக் கிரியைகளுடன் 1924ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அன்றிலிருந்து நாச்சியார் ஆலயம் என வழங்கலாயிற்று.
திருவாளர். சின்னையா சின்னத்தம்பி திருமதி. சின்னத்தம்பி உமையாச்சி பராமரித்த பின்னர் அவர்களின் பிள்ளைகள் திரு. சி. அருணாசலம், திரு. சி. இராமநாதன் ஆகியோர் 1965ஆம் ஆண்டு வரை ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் பராமரித்தனர். திர. சி. அருணாசலம் அவர்களே கோவில் முகாமையாளராக செயற்பட்டார். வழிபடுவோரின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. சி. அருணாசலம் அவர்கள் 30.07.1965இல் அமைப்பு ரீதியாக பரிபாலன சபை ஒன்றை உருவாக்கினர். அதில் திரு. வீரசிங்கம் கதிரவேலு செயலாளராகவும், திரு. நாகமணி நடராசா பொருளாளராகவும் செயற்பட்டார்கள். இந்நிகழ்வு கோவில் நிர்வாக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க ஓர் மைல் கல்லாகும்.
நிர்வாக சபை விஸ்தரிப்பு, நிர்வாக சட்டவிதிகளை ஆக்கியமை வழிபடுவோரால் நிர்வாக சபை தெரிவு செய்தல் போன்ற ஜனநாயகப் பண்புகள் வளர்ச்சியடையலாயிற்று. ஆலய சட்டவலுவாக்க நிர்வாக வளர்ச்சியில் அதன் தலைவராக இருந்த முன்னாள் யாழ் நகர முதல்வரும் பிரசித்தி பெற்ற சட்டத்தரணியுமான திரு. சு. செ. மகாதேவா அவர்களின் காத்திரமான பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். வழிபடுவோரால் தெரிவுசெய்யப்படும் தலைவர் நிர்வாக முகாமையாளராக செயற்பட்டமை கோவில் வளர்ச்சியில் வழிபடுவோரின் பங்களிப்பை மேலும் உற்சாகப்படுத்தியது. இதன் பயனாக பரிவார மூர்த்திகளின் பிரதிஷ்டைகள் இடம்பெற்றன. வைரவர்சுவாமி கோவில், மணிக்கூட்டுக்கோபுரம் முதலியன அமைக்கப்பட்டன. வசந்தமண்டபம், பிரகாரங்கள், கூரைகள் திருத்தியமைக்கப்பட்டன. நாளடைவில் இவ்வாலயம் ”அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலயம்” என வழங்கலாயிற்று.
1966இல் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. 1976இல் சுப்பிரமணியர் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டதோடு தற்போது மூலமூர்த்தியாக அருள் பாலித்துக்கொண்டிருக்கும் மகாமாரி அம்மன் விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.
1984இல் மஹோற்சவம் ஆரம்பிக்கப்பட்டு பெரு வளர்ச்சி கண்டது. 1988இல் திருக்கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு தற்போது அம்பாள் திருவருளால் இனிது நிறைவேறியுள்ளது. இவ்விராஜகோபுரத்திற்கு 05.04.1999 திங்கட்கிழமை காலை 09.15 – 10.30 மணி வரையுள்ள சுப முகூர்த்த்த்தில் மகா கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது.
அடுத்து தேர்த்திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு ஷ்தபதி விஷ்வப்பிர்ரம்மஸ்ரீ சி. அமரசிங்கம் ஆச்சாரியரினதும் அவரது குழுவினரதும் கைவண்ணத்தில் ”ருத்திராகார சித்திரத்தேர்” உருவாக்கப்பட்டு 22.07.2009 புதன்கிழமை பி.ப. 01.30 – 03.00 வரையுள்ள சுப முகூர்த்த்த்தில் தேர் வெள்ளோட்ட விழா அம்பாளின் திருவருளுடன் இனிதே நிறைவேறியது.