அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டமையை கண்டித்து கடந்த 11.09.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு முன்பாக கண்டி வீதியை மறித்து போராட்டத்தை நடத்தி தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தார்கள். மேலும், தமது நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தமது அனுமதியின்றி, தமக்கு அறிவித்தலும் வழங்காது அடாவடித்தனமாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினர் தமது வைத்தியசாலை கழிவுகளை இங்கு கொட்டியுள்ளதாகவும், இதனால் இப்பிரதேசம் பாரிய தொற்றுநோய் அபாயத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பாக ஆராய்கையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையின் கடந்த 16.08.2020ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் நிர்வாக உபதலைவர் அவர்களால் மயானத்தின் தாழ்வு நிலப்பரப்பை சீராக்கம் செய்வதற்காக போதனா வைத்தியசாலையின் நல்ல குப்பை கூளங்களையும், கட்டட இடிபாடுகளையும் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி கோரியிருந்ததாகவும், அதனை நிர்வாகம் ஏகமனதாக ஏற்றுக்கொண்டு அதற்கு அனுமதி வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையினர் கடந்த 20.08.2020ஆம் திகதி தமது கடிதத்தலைப்பில் “மயான சீராக்கம் (தாழ்வு நிலப்பரப்பு)” என்னும் தலைப்பில் மயான சபை தலைவரும், செயலாளரும் கையொப்பமிட்ட கடிதம் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு அனுப்பியிருந்தனர். அக்கடிதத்திலேயே யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொற்று அற்ற வெற்று போத்தல்கள் மற்றும் கட்டட இடிபாடுகளை வழங்க அனுமதித்து கையொப்பமிட்டு அவரின் இறப்பர் முத்திரையும் பதிக்கப்பட்ட கடிதப்பிரதி யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.
சில நாட்களின் பின்னர், கடந்த 12.10.2020ஆம் திகதி திங்கட்கிழமை அரியாலை நலன் விரும்பிகள் சிலர் இணைந்து அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் எதிர்வரும் 17.10.2020 மற்றும் 18.10.2020 ஆகிய இரு தினங்கள் (சனி, ஞாயிறு) தாம் மயானத்தில் சிரமதானம் மேற்கொள்ளவுள்ளதாக மயான சபை தலைவருடன் தொடர்புகொண்டு ஒருவர் தெரிவித்திருந்தார். அதற்கு தலைவர் சம்மதம் தெரிவித்ததுடன், மயான சபைக்கு தான் அறிவிப்பதாகவும், மேலும், இக்கோரிக்கையை கடிதம் மூலம் வழங்குமாறும் தெரிவித்திருந்தது.
அவ்வாறு இருக்கையில், அவ் நலன்விரும்பிகளில் ஒருவர் எதிர்பாராதவிதமாக கடந்த 16.10.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை நல்லூர் பிரதேச சபை செயலாளருடன் கலந்துரையாடியபோது இச்சிரமதானம் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தார். அதற்கு நல்லூர் பிரதேச சபை செயலாளர் “அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தினை நல்லூர் பிரதேச சபை பொறுப்பெடுத்துள்ளதாகவும், தற்போது மயானத்திற்குள் ஒரு சிரமதானமும் மேற்கொள்ள முடியாது எனவும், வைத்தியசாலை கழிவுகள் கொட்டிப்பட்டமை தொடர்பாக மயான சபையினர் இதுவரை நல்லூர் பிரதேச சபையுடன் எந்தவித தொடர்பும் ஏற்படுத்தவில்லை எனவும், மேலும், இது தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எதிராகவும், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபைக்கு எதிராகவும் நல்லூர் பிரதேச சபை வழக்கு தொடரவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்”
இதனையடுத்து மறுநாள் 17.10.2020ஆம் திகதி சனிக்கிழமை காலை 08.00 மணியளவில் அரியாலை நலன் விரும்பிகள் சிலர் மயான சபை தலைவரின் வீட்டிற்கு சென்று நேரடியாக தொடர்புகொண்டு நல்லூர் பிரதேச சபை செயலாளர் தெரிவித்த அனைத்தையும் தலைவருக்கு தெரிவித்து விளக்கம் கோரியிருந்தார்கள். அதற்கு தலைவர் தான் நல்லூர் பிரதேச சபை தவிசாளருடன் தொடர்பு ஏற்படுத்தியதாகவும், ஆனால் தவிசாளர் தன்னுடன் தொடர்புகொள்ளவில்லை எனவும் தெரிவித்திருந்தார். பின்னர் அரியாலை நலன்விரும்பிகளின் வேண்டுதலுக்கு இணங்க மயான சபை உறுப்பினர்களும், அரியாலை நலன்விரும்பிகளும் இணைந்து தவிசாளருடன் கலந்துரையாடுவது எனவும், இக்கலந்துரையாடல் தவிசாளரின் அலுவலகத்தில் நாளை மறுதினம் (19.10.2020ஆம் திகதி திங்கட்கிழமை) நடைபெறும் எனவும் தீர்மானிக்கப்பட்டு, அதற்கு ஏற்ற ஒழுங்குகளை மயான சபையினர் மேற்கொண்டிருந்தனர். இருந்தபோதும், அக்கலந்துரையாடல் இரு தடவைகள் பிற்போடப்பட்டு பின்னர் 26.10.2020ஆம் திகதி திங்கட்கிழமை கலந்துரையாடல் நடைபெற்றது.
அக்கலந்துரையாடலில், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான சபையினர் பாரிய தவறு இழைத்துள்ளதாகவும், மேலும், அதை மறைக்க முற்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு சித்துப்பாத்தி மயான சபை தலைவர் அவர்கள் தான் தங்களுக்கு தொலைபேசி தொடர்பு ஏற்படுத்தியதாகவும் அதனை தாங்கள் பொருட்படுத்தவில்லை எனவும் தெரிவித்தார். அதனை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை. தொடர்ந்து சித்துப்பாத்தி மயான சபையினர் தமது ஊர் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வகையில் முன்பு இருந்தவாறே மயானத்தில் சடலத்தை எரிப்பதற்காக பணம் வசூலித்து பற்றுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினையும், சடலத்தை எரிக்கும் செயற்பாட்டினையும் தங்களுடைய பொறுப்பிலேயே விடுமாறு கோரியிருந்தார்கள். அதற்கு தவிசாளர் அவர்கள் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் ஒரு பிரச்சனையும் இன்றி சாதாரணமாக இயங்கிக்கொண்டிருந்தமையால் இதுவரை காலமும் தாம் அதில் தலையிடவில்லை எனவும், ஆனால் தற்போது மயானம் தொடர்பான அனைத்து செயற்பாடுகளையும் தாம் பொறுப்பெடுத்துள்ளதாகவும், தற்போதைய மயான சபை கலைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய அமைப்பு விதிகள் உருவாக்கப்படுவதாகவும், அவ் அமைப்பு விதியின் பிரகாரம் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அப்போது அரியாலை நலன்விரும்பிகளில் ஒருவர் இவ் மயானத்தின் உரிமை யாருடைது என வினாவினார். அதற்கு மயானத்தின் உரிமை நல்லூர் பிரதேச சபைக்கே உரியது என தவிசாளர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் வேறுசில அரியாலை நலன் விரும்பிகளாலும் சித்துப்பாத்தி இந்து மயானத்தில் சிரமதானம் மேற்கொள்வதற்கு தலைவரிடம் அனுமதி கோரியிருந்தார்கள்.
அதன்பின்னர் அரியாலை நலன் விரும்பிகள் பாலர் இணைந்து ஊரில் உள்ள வயது முதிர்ந்தவர்களையும், மயானத்துடன் தொடர்புடையவர்களையும் அணுகி சித்துப்பாத்தி இந்து மயானத்தின் பூர்வீக தகவல்களை திரட்டி பின்னர் கடந்த 01.11.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 07.00 மணிக்கு நல்லூர் பிரதேச சபை தவிசாளரை அரியாலைக்கு அழைத்து கலந்துரையாடினார்கள். அதில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானம் எமது மூதாதையர்களால் அவர்களின் சொந்த காணியில் அவர்களின் சொந்த முயற்சியால் உருவாக்கப்பட்டது எனவும், அது அரியாலையின் அடையாளங்களில் ஒன்று எனவும், அது அரியாலை ஊர் மக்களாலேயே நிர்வாகம் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றது எனவும், ஆனால், இவ்வாண்டு நிர்வாகம் தவறுதலாக இத்தகைய ஒரு செயற்பாட்டினை செய்துவிட்டது எனவும், மேலும் இம்மயானத்தினை எமது அரியாலையில் பிறந்தவர்களையும் மற்றும் அரியாலையில் வசிப்பவர்களையும் மட்டுமே பயன்படுத்த அனுமதிப்பது எனவும், இவ் மயானத்திற்காக எமது உள்ளுர் மற்றும் புலம்பெயர் வாழ் மக்களால் பல இலட்சக்கணக்கில் நிதி ஒருக்கீடு மேற்கொள்ளப்பட்டு அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், இத்தகைய எமது சொந்த மயானத்தில் தற்போது எமக்கு உரிமையில்லை என தாங்கள் கூறுவதை எம்மாலும், எமது ஊர் மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், இவ்வாண்டு நிர்வாகம் செய்த ஒரு தவறுக்காக எமது மயான உரிமையையும், ஊரின் அடையாளத்தையும் நாம் இழக்க முடியாது எனவும், மயான நடைமுறைகளை மாற்றவேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்கள். அதற்கு தவிசாளர் கருத்து தெரிவிக்கையில், மயானத்தின் நிலத்தை உயர்த்துவதற்கு ஏன் மருத்துவ கழிவுகளையும், மருத்துவமனை போத்தல்களையும் கொட்டியுள்ளார்கள் எனவும், நிலத்தை உயர்த்துவதாயின் அதில் ஏன் குழி தோண்டி கழிவுகளை கொட்டி புதைக்க முற்பட்டுள்ளார்கள் எனவும் கேள்வி எழுப்பியதுடன் இச்செயற்பாட்டால் அரியாலை மக்கள் மட்டுமன்றி யாழ்ப்பாண சமூகமுமே பாரிய தொற்றுநோய் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டி வரலாம் எனவும், பயிர்ச்செய்கை போன்ற வேறு தேவைகளுக்கு இவ் நிலப்பரப்பை பயன்படுத்தமுடியாது போய்விட்டது எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, கிராம சபை உருவாக்கப்பட்டபோது அனைத்து மயானங்களின் உரிமைகளும் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், ஆயினும், தங்களின் இந்த மயானம் சாதாரண நடைமுறையில் இயங்கிக்கொண்டு இருந்தமையால் இதுவரை காலமும் தாங்கள் அதில் தலையிடவில்லை எனவும், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சனையால் தாங்கள் இவ் மயானத்தை பொறுப்பேற்றுள்ளதாகவும், அத்துடன் தற்போதைய மயான நிர்வாகம் கலைக்கப்பட்டுள்ளதாகவும், அவ் நிர்வாகத்தின் மீதும், யாழ். போதனா வைத்தியசாலை மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்ததுடன், அனைத்து மயானங்களுக்கும் பொதுவான ஒரு புதிய அமைப்பு விதி உருவாக்கப்படுவதாகவும், அது உருவாக்கப்பட்டதன் பின்னர் அவ் அமைப்பு விதியின் பிரகாரம் சித்துப்பாத்தி மயானத்திற்கு தை மாதமளவில் அரியாலை மக்களை உள்ளடக்கிய புதிய நிர்வாகம் உருவாக்கப்படும் எனவும், புதிய நிர்வாகம் உருவாக்கப்படும்போது தங்களின் ஏனைய பிரச்சனைகள் தொடர்பாக ஆராயலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு தற்காலிக தீர்வாக எமது மயானத்தில் சடலத்தை எரிப்பதற்கான பணத்தை வசூலித்து பற்றுச்சீட்டு வழங்கும் செயற்பாட்டினையும், சடலத்தை எரிக்கும் செயற்பாட்டினையும் முன்னிருந்தவாறு எமது அரியாலை மக்களிடமே ஒப்படைக்குமாறும், கொட்டப்பட்ட கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்குமாறும், எமது மயானத்தின் உரிமை நிரந்தரமாக அரியாலை மக்களுக்கே உரியது எனவும் அரியாலை நலன் விரும்பிகள் தவிசாளருக்கு தெரிவித்தார்கள்.
தற்போதைய நிலைமையின்படி எமது மக்கள் எமது சித்துப்பாத்தி இந்து மயானத்தை பயன்படுத்துவதற்காக நல்லூர் பிரதேச சபை அலுவலகத்திற்கு சென்று ரூபா. 1,250.00 கட்டணம் செலுத்தவேண்டிவுள்ளது. அத்துடன் நல்லூர் பிரதேச சபையினர் சடலத்தை எரிப்பதற்கான ஒரு ஒழுங்குகளையும் மேற்கொள்வதில்லை என்பதால் மரண வீட்டுக்காரரே அதற்குரிய ஒழுங்குகளை செய்யவேண்டியுள்ளதுடன் அவர்களுக்குரிய பணத்தினையும் தனியாக செலுத்தவேண்டியுள்ளது. முடிவாக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான நிர்வாகம் தற்போது இயங்குவதில்லை.