நல்லூர் தெற்கு ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான வரலாறு
“புளியடி வளவு” என்னும் காணியில் கோவில் கொண்டோன்
துருத்தி கந்தன் பிள்ளையார்” என்று நாமம் பூண்டோன்
புராதன வரலாறு இன்று அடியேன் எடுத்துரைக்க
அவன் திருவருள் வேண்டி என் இருகரம் கூப்பி ஏற்றி இறைஞ்சுகின்றேனே…”
தென்கைலாயம் என போற்றப்படும் ஈழ வள நாட்டில் வடபால் சென்னியாக விளங்கும் யாழ்ப்பாணத்தில், கச்சேரி நல்லூர் வீதி நல்லூர் தெற்கு எனும் பகுதியில் கோவில் கொண்டு எழுந்தருளி இப்பகுதி மக்களின் குலதெய்வமாகவும் தோன்றாத் துணையாகவும் விளங்குகின்றார் திருவருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயக பெருமான். கற்பக தெருவில் அரச மரத்தடியில் கோவில் கொண்டெழுந்தருளி இருக்கும் ஸ்ரீ கற்பக விநாயக பெருமானை அடியார்கள் போற்றித்துதித்து நல்வரங்களை பெற்று வாழ்வது மிகவும் தொன்மையானதாகும்.
தற்போது மூர்த்திஇ தலம், தீர்த்தம், விரூட்சம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இந்த ஆலயத்தில் நூதன திரிதள இராஐ கோபுரமும், மூலஸ்தான ஸ்தூபி, பரிவார ஸ்தூபிகள், மணிக்கூட்டு கோபுரம், வசந்த மண்டப ஸ்தூபி, சபை ஸ்தூபி என்பன புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு 18.03.2013 இல் அஷ்ட பந்தன நவகுண்ட நூதன திரிதள இராஐ கோபுர கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு புதுப்பொலிவுடன் மெருகும் பெற்று இக்கோவில் காணப்படுகின்றது.
தெய்வம், கோவில் கொண்டருளி உள்ள தலத்தினை அண்மித்து வாழுகின்ற மக்களின் குலதெய்வமாகி தோன்றாத் துணையாய் அருளிநிற்றல் இயற்கை. அவ்வாறே சுண்டிக்குளி கோவிற்பற்று இறையில் வாழ்ந்த மக்களின் குலதெய்வமாக துலங்கும் எல்லாம் வல்ல “ஸ்ரீ கற்பக பிள்ளையார்”; அவர் தம் குலமக்களுக்கு அன்பும் ஆதரவும் அருளும் நல்குகின்ற சக்தி சொரூபமானதாய்.! எண்ணிலாத பொருட்குவை தானும்இ ஏற்றமும் புவியாட்சியும் ஆங்கே விண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளியும் வெண்மையும் பெருந்திண்மையும் அறிவும் அருளிய வண்ணம்; என்றென்றும் தம் மெய்யடியார்களை அரவணைத்தவாறே கோவில் கொண்டருளியுள்ளார்.
இக்கோவில் உருவான விதம் பற்றி பெரியோர் வாயிலாக வழி வழியாக கூறப்பட்டு வருவதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது.
சுமார் நூறு ஆண்டு பழைமை வாய்ந்த இத்திருக்கோவில் புளியடிவளவு என்னும் காணியில் மேட்டுப்பகுதியில் அரச மரங்கள்இ ஆல மரங்கள், வில்வ மரங்கள் போன்ற தல விருட்சங்களுடன் தென்னை, பனை, கமுகு, வேம்பு மற்றும் பயன்தரு மரங்கள் கூழ்ந்த சோலையில் இயற்கை அரண்களுடன் இக்கோவில் அமைந்திருந்தது.
இவ் இடத்தை அண்டி வாழ்ந்து வந்த மக்கள் வழிபடு செய்யும் பொருட்டு, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கோவில் ஒன்றை அமைக்க விருப்பினர். அக்காலத்திலேயே துருத்தி கந்தன் என்பவர் தனது கொல்லன் பட்டடையில் பிள்ளையார், லிங்க வடிவிலான கல்லை வைத்து வணங்கி வந்தார். அவ்விடத்தையே மக்களும் வழிபாடு செய்யும் வகையில் ஏறத்தாழ 1900ம் ஆண்டுகளில் அதனை கோவிலாக அமைத்து வழிபட்டு வந்தனர். துருத்தி கந்தனின் பரிபூரண ஒத்துழைப்புடன் ஒரு கொட்டில் போட்டு கிடுகால் வேயப்பட்டு அதன்கீழ் பிள்ளையார், லிங்கம் வைத்து பூசித்து வந்தனர். இதற்கு “துருத்தி கந்த பிள்;ளையார்” என்று பெயரும் வைத்தனர். கந்தன் என்பவரின் கொல்லன் பட்டடையில் துருத்தி ஊதினபடியால் இப்பெயர் காரணப்பெயராக அமைந்தது போலும். இன்று எம்பெருமான் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள மூலஸ்தானமே அன்று அந்த கம்மாலை இருந்த இடமாகும். தற்போது உள்வீதியாக உள்ள நிலமே இதன் பாரம்பரிய சொந்தக்காரருக்கு உரியது. எஞ்சிய பகுதி (விளையாட்டு மைதானம், நெசவு நிலையம் (தற்போதைய சனசமூக நிலையம்) பழைய வாகனசாலை, தற்போதய ஆலய குருக்கள் விடுதி) அயலவர்களின் தரும சாதனமாகும். 1983-2-16 இல் ஆலய அமைப்பு விதியை (யாப்பு) அப்போதைய உதவி அரசாங்க அதிபர் திரு. ஆ மாணிக்கவாசகர் அவர்களால் அமைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.
இப்பிள்ளையாருக்கு பூசை செய்யும் பொருட்டு சைவ போசனம் கொள்ளும் சிற்பாசாரியான சிற்றம்பலம் சரவணமுத்து (சரவணை) என்பவர் நியமிக்கப்பட்டார். இவருடன் இணைந்து பொன்னம்பலம் முத்துக்குமாரு என்பவரும் கோவிலை பராமரித்து வந்தார். துருத்தி கந்தனின் சந்ததியில் உள்ளவர் தான் சின்னக்குட்டி சங்கரப்பிள்ளை என்பவர். துருத்தி கந்தனின் மறைவுக்கு பின் சங்கரப்பிள்ளையே கோவிலை பொறுப்பேற்று நடாத்திவந்தார். இவருடைய காலத்திலேயே அயலவர்களின் தேக உதவி, பொருள் உதவியுடன், மண் செங்கல்லால் ஆன சிறு கட்டடம் கட்டப்பட்டது. மேலும் அலங்கார திருவிழா ஆரம்பிக்கப்பட்டு எம்பெருமானுக்கு பெருவிழாவும் செய்து வணங்கி வந்தனர். சங்கரப்பிள்ளையின் காலத்திற்கு பின்பு கோவில் பராமரிப்பு சிற்றம்பலம் சரவணமுத்துவின் பொறுப்புக்கு வந்தது. சிற்ப சாஸ்திரியான இவருடைய காலத்திலே அவரது சொந்த பொறுப்பிலேயே இக்கோவில் இடிக்கப்பட்டு சுண்ணாம்புக்கல், காட்டுக்கல்லால் கொஞ்சம் பெரிய கோவிலாக கட்டி பண்டிகை வேலையும் செய்யப்பட்டது. சரவணமுத்துவின் காலத்திற்கு பின்னர் கோவில் பராமரிப்பு பொறுப்பை ஏற்க யாரும் முன்வராததால் ஊர் மக்கள் கோவில் முன்றலில் கூட்டம் கூடினார்கள். பத்து அங்கத்தவர்களை கொண்டதும் வழக்கறிஞர் ஸ்ரீமான் க.பொன்னம்பலம் மனேச்சராகக் கொண்டதுமாகிய ஒரு ஆலய பரிபாலனசபை தெரிவுசெய்யப்பட்டு பிராமணர் ஒருவர் மூலம் பூசை வழிபாடுகளும் செய்து வந்தனர். வழக்கறிஞர் ஸ்ரீமான் க.பொன்னம்பலம் இறந்ததும் மீண்டும் மகாசபை கூடி ஜந்து பேரைக்கொண்ட ஆலய பரிபாலனசபை தெரிவுசெய்யப்பட்டது. சி.வைத்திலிங்கம் என்பவரே இதன் தலைவராகப் பதவி ஏற்று கோவிலை நடாத்திவந்தார். இவ்வாறே ஆலயம் பல தலைமுறையினரால் பல்வேறு வழிகளில் வளர்ச்சியடைந்து வந்தது.
08.06.1992 திகதிய HA/5/JA/716 என்ற பதிவிலக்கத்தை உடைய இக்கோவில் பரிபாலனசபையினால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தினசரி மூன்று வேளை நித்திய பூசை நடைபெறுவதுடன், மாதாந்த விசேட பூசை, சிறப்பு விரத அனுட்டானங்களும் நடைபெற்று வருகின்றது. வைகாசி மாத பௌர்ணமி தின தீர்த்தத்திற்கேற்ப 10 நாட்கள் கொடியேற்றத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது. ஆலய நிர்வாகத்திற்கு ஒத்தாசையாக அமையப்பெற்ற இந்து இளைஞர் மன்றம், திருப்பணிச்சபை, அன்னதான சபை என்பன இவ்வாலய வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாகவுள்ளது.
தலவிரூட்ச ஆலமரத்தின் கீழ் வீற்றிருந்து தன்னை நாடிவரும் அடியவர்களின் கஸ்ட துன்பங்களைப் போக்கி நல்வாழ்வு வழங்கும் கற்பக பெருமானின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டிநிற்கின்றோம்.