சிவன் கோவில் வரலாறு
திரு.சி. பொன்னம்பலம் அவர்கள் (கோவில் பரிபாலகர்)
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அருகாமையில் தியாகராஜப் பெருமானுக்கும் இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும் கோயில்கள் கட்டப்பெற்றுள்ளன. இவை 1955 ஆம் ஆண்டில் முற்றுப்பெற்று அவ்வருடம் தை மாதம் மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகமும் நடைபெற்றது.
இங்கே ஸ்தாபிக்கப்பட்டு பிரதிஷ்டை பண்ணியுள்ள சிவலிங்கம் காசியிலிருந்து கொண்டு வரப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அந்த லிங்கம் மனிதனால் செதுக்கப்பட்டதன்று என்பதும் கங்காநதியினால் உருவாகியது என்பதும் அதனை உற்று நோக்குபவர்களுக்குத் தெற்றெனப் புலப்படும். அது கண்ணாடி போல அழுத்தமாகவும் ஒளியினைப் பிரதி விம்பிப்பதாகவும் பிரகாசமுள்ளதாகவும் ஒரு புறத்தே மறையொன்றை உடையதாகவும் விளங்குகின்றது. 1880 ம் ஆண்டுக்கு முன் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தின் பரிபாலகராய் இருந்த தாமோதரர் சின்னத்தம்பியும் அவருடைய பாரியார் உமையவல்லியும் பிள்ளைப்பேறு கருதி இந்தியாவில் ஷேத்திராடனம்; செய்த போது காசியில் இச் சிவலிங்கத்தைப் பெற்றுக் கொண்டு வந்திருக்கலாம். என அனுமானிக்க இடமுண்டு. ஏனெனில் 1881 ஆம் ஆண்டில் தியாகராஜப் பெருமானுக்கும் இராஜராஜேஸ்வரி அம்பாளுக்கும் விநாயகர் கோவிலுக்கு வடக்கே புறவீதிக்கு உட்புறத்தில் கோயில் கட்டுவிக்க ஆரம்பித்தார்கள் என்பது அவர்கள் எழுதிய உறுதிச் சாதனங்களால் அறியக் கிடக்கிறது. எனவே நாம் காசியிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யவே அக்கோயிலைக் கட்டுவிக்கத் தொடங்கினர் என்பது துணிபு.
சித்திவிநாயகர் ஆலயம் புதிதாகக் கட்டப்படுவதற்கு முன்னரே மூலஸ்தானத்துக்கு வடக்கே இப்போது சதுரக்கிணறும் நீர்த்தொட்டியும் கட்டப்பட்டுள்ள இடத்திற்கு மேற்கே சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் கட்டப்பெற்று முடிவுறாமல் பாழடைந்த நிலையில் இருந்தன என்பது இப்போது நடுத்தர வயதுள்ளவர்கள் அறிவர்.
அக் கோயில்களை அவ்விடத்திற் கட்டுவது திருவுளற் சம்மதம் இல்லையாற் போலும் அவை முற்றுப் பெறாதொழிந்தன. அச் சிவலிங்கம் சித்திவிநாயகர் ஆலயத்திற்குத் தெற்கு வாசலுக்கு நேரே வைக்கப்பட்டிருந்தது. காலஞ்சென்ற அத்துவக்காத் அருளம்பலமவர்கள் கோயிற் பரிபாலகராய் இருந்த போது அந்த லிங்கம் கொடித்தம்ப மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த லிங்கமே புதிதாக அமைக்கப்பட்ட சிவன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இச் சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் கட்டுவதற்கு உபயோகிக்கப்பட்ட பொழிந்த சுண்ணக்கற்கள் எல்லாம் மேல் குறிப்பிட்ட பாழடைந்த கோயிற் கற்களேயாம். வசந்த மண்டபமும் நவக்கிரகங்களின் கோயிலும் பின்னர் கட்;டப்பபெற்றவை.
இக் கோயில்கள் கட்டப்பெற்ற பின்பு அடியார்கள் சிவபூசை செய்தல், எள்ளெண்ணெய் எரித்தல், கிரக தோஷங்களுக்குச் சாந்தி செய்தல் முதலிய நேர்த்திக்கடன்களைச் செய்வதற்கு வசதி ஏற்பட்டது. இங்கு 1961 ம் ஆண்டு தொடங்கி 11 நாட்கள் அலங்கார உற்சவம் செய்யப்பட்டு வருகிறது.