ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் வரலாறு
இலங்கைத் திருநாட்டின் வட பகுதியில் யாழ்ப்பாணநகர் நல்லூர் அரசதானியில் அரியாலை என்னும் ஊரில் நெய்தலும், மருதமும் ஒருங்கே அமைந்த அரியாலை கிழக்குப் பகுதியில் வட கடலேரிப் பக்கமாக வயல் வெளிகளும், பனை மரங்களும் நிறைந்த சிறிய பரட்டைக் காட்டுப் பகுதியில் மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களால் சம்புப் புல்லுக்குள் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையை அரச மரத்தடியில் வைத்து வழிபாடு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தக் கோயில் கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் கழிந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
இங்கு வாழ்ந்த முன்னோர்கள் வயல் நிலங்களில் நெற்செய்கையையும், மேட்டு நிலத்தில் தென்னந்தோட்டம் பனைமரங்கள் என்பவற்றைப் பராமரித்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாக அறியப் பட்டது. காலப்போக்கில் கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளுக்குச் சென்று குடியேறியதால் கோயிலைப் பராமரிக்க ஆட்கள் நியமிக்கப்பட்டார்கள். இக் கோயில் திரு.முத்தையா நவரத்தினம்மா தம்பதிகளின் பரம்பரையினரது எனக் கூறப்பட்டு வருகின்றது. திரு. சின்னத்தம்பி அருணாசலம் உபாத்தியாயர் அவர்கள் அதிக காலம் பராமரித்து வந்தார். அவரின் மறைவுக்குப் பின் சின்னத்தம்பி இராமநாதன் சிறிது காலம் பராமரித்து வந்தார்.
இக்கோயிலானது சுண்ணாம்புக் கற்களாலும், வெண்கற்களாலும் கட்டப் பட்ட பழமை வாய்ந்ததோடு மூலஸ்தானம், மகா மண்டபம், அர்த்த மண்டபம், பலிபீடம், மொட்டைக் கோபுரம், வசந்த மண்டபம் வரை பன்னிரண்டு உருண் டைத் தூண்களைக் கொண்ட பெரிய மண்டபம் காணப்பட மூலஸ்தானத்திற்கு வடக்கே சிவலிங்கப் பெருமானும், முன்னே நந்தி பலிபீடமும், தெற்கு நோக்கிய சிவகாமி அம்மனும், தீர்த்தக் கிணறும், வடமேற்கில் வள்ளி தெய் வானை சமேத முருகனும், அதன் தெற்கே கிருஷ்ணரும் வாயிலின் வடக்கே வைரவருடன் நாக தம்பிரானும் அடுத்து மணிக்கோபுரமும் சுண்ணாம்புக் கற்களால் வளைவாகக் கட்டப்பட்ட வசந்த மண்டபமும் அதனுள் எழுந்தருளி விநாயகர், நடராசர், உமையம்மன், வள்ளி தெய்வானை சமேத கந்த சுவாமியாரும் வீற்றிருக்கின்றனர். சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்ட உள்வீதிச் சுற்று மதில் வெளி வீதியின் தென் மேற்கில் தீர்த்தக் கேணியும் கேணிக்குக் கிழக்காக அந்தணர் விடுதியும் சேர்ந்த மடமும் அமையப் பெற்றிருந்தது. இக் கோயிலுக்குச் சொந்தமாக தென்னந் தோட்டங்களும், வயல் நிலங்களும் காணப்பட்டு வருமானம் பெறப்பட்டது. நித்திய பூசை, விசேட திருவிழா, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, மகா சிவராத்திரி என்பனவும் நடைபெற்று வந்தது.
1962 ஆம் ஆண்டு திரு. முத்தையா குமாரசாமி தலைமையில் பரிபாலன சபை ஸ்தாபிக்கப்பட்டு நவரத்தினம்மா அவர்களினால் கோயிலையும், கோயில் காணியையும் நிர்வகிக்கும் பொறுப்பு திரு. க. வல்லிபுரம் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட காலப்பகுதியில் கோயில் மிகவும் பழமை நிலையில் காணப்பட்டது.
1979 ஆம் ஆண்டு பூசகர் பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி ஐயா, பரிபாலனசபை க.வல்லிபுரம் ஆகியோர் கலந்துரையாடி கோயிலைப் புனரமைப்புச் செய்யத் தீர்மானித்து உபயகாரர்கள், ஊர்மக்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்தப் பட்டது. பாலஸ்தான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு திருப்பணி வேலைகள் திரு.க.வல்லிபுரம் பொறுப்பில் ஆரம்பிக்கப் பட்டது. திருப்பணிக்குரிய நிதி திரட்டும் பணியில் திருமதி. நவரத்தினம்மா மகன் குமாரசாமி, திருமதி தேவகி தனராசா ஆகியோர் ஈடுபட்டனர். மூலஸ்தானம் இடிக்கும் வேலையின் போது படிக்குக் கீழ் காணப்பட்ட சில்லறை நாணயங் களில் காணப்பட்ட குறியீடுகள் ஆண்டுகளை வைத்து இக்கோயில் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
கட்டுமாண வேலை முடிந்த போது பார்வையிட்ட குருக்கள் விநாயகருக்கு வலது பக்கத்தில் கஜலக்ஷ்மி அம்பிகை அமைந்தால் ஆலயம் சிறப்படையும் எனக் கூறியதால் கஜலக்ஷ்மி கோயில் தென்மேற்கு மூலையில் ஸ்தாபிக்கப்பட்டது. நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய கோயில் தோட்ட வருமானங்கள் விற்பனை செய்யப்பட்டது. வெளி மண்டபமும், உள்வீதிச் சுற்று மதிலும் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்டது. வசந்த மண்டபம் கோபுர வாசல் திருத்தம் செய்யப்பட்டு 1980 ஆம் ஆண்டு ஆனி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பிரம்மஸ்ரீ மகாதேவா சிவாச்சாரியார் தலைமையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்றிரவு முழுவதும் மேளக்கச்சேரி, கலை நிகழ்வுகள் நிகழ்ந்து அதிகாலை வசந்த மண்டபப் பூசை நடைபெற்று உள்வீதி வலம் வந்து முத்துச் சப்பரத்தில் வெளிவீதி வலம்வந்து மின்னொளி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
இக்கோயிலில் மடை அபிஷேகம் சிறப்பு பெறும். விவசாயத்தில் ஈடுபடும் மக்களுக்காக மழை வேண்டி திரு.மு.குமார சாமி, திரு. க. வல்லிபுரம், திரு. இ. தியாக ராசா ஆகியோரில் ஒருவரால் வெள்ளி அல்லது ஞாயிற்றுக் கிழமையன்று இளநீர் உடைக்கப்பட்டட அடுத்த வாரத்தில் அதே கிழமை நாளில் அவ்வூர் விவசாயிகள் தங்களால் விளைவிக்கப் பட்ட இளநீர்களை வண்டில்களில் கொண்டு வந்து விநாயகருக்கு சிறப்பான அபிஷேகம் நடைபெற்று பொங்கல் அன்னம் கடலில் கொட்டப்படும். அந்த வாரத்தில் மழை பொழிந்து விவசாயம் சிறக்கும். விவசாய விளைபொருளின் சிறு பங்கு கோயிலுக்கும் வழங்கப்படும் மரபு தவறுவதில்லை.
1990 ஆம் ஆண்டு ஸ்ரீமுத்து விநாயகர் கோயிலுக்குப் புதிய பரிபாலன சபை தெரிவு செய்யப்பட்டு தலைவராக திரு. நா. அருளம்பலம் உப தலைவராக திரு. சு. கனகரத்தினம், செயலாளராக, திரு. கு. வயிரவநாதன் , பொருளாளராக திரு. சு. அருணாசலம் என நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு திரு. க. வல்லிபுரம் அவர்களிடம் இருந்து கோயில் பொறுப்புக்கள் பரிபாலன சபையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாக சிதை வடைந்த கோயிலை திரு.வி.சச்சிதானந்தன் தலைமையிலான பரிபாலன சபை 2011 ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்டது. புணருத்தானம் செய்யப்பட்டு 2012 ஆம் ஆண்டு தை மாதம் பிரம்ம ஸ்ரீ கணேச சர்மா அவர்களால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு நித்திய நைமித்திய பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வருகின்றன. திருவிழா ஆனிமாதம் ஒன்பது நாட்கள் நபன அபிஷேகமும் பத்தாம் நாள் ஆனிப் புனர்பூசத்தன்று 1008 சங்காபிஷேகமும் இரவுத் திருவிழாவின் போது முத்துச் சப்பை ரதத்தில் விநாயகர், வெளிவீதி உலா வந்து அருள்பாலிப்பார்.