101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவாகிய இன்றையதினம் (14.04.2020) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு மிகவும் குறுகிய நிகழ்வாக அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலிலும் காலை 08.00 மணிமுதல் விசேட பூசை வழிபாடும் அர்ச்சனையும் நடைபெற்று தொடர்ந்து காலை 09.00 மணியளவில் அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா தூபியில் சுதேசிய கொடி ஏற்றப்பட்டு, தேவாரம், சுதேசிய கீதம் இசைக்கப்பட்டு, அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா தூபிக்கு மாலையும் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அரியாலை சுதேசியத்துடன் தொடர்புடைய ஒன்பது சனசமூக நிலையங்களின் ஊடாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் வசிக்கும் தலா 20 வறிய குடும்பங்கள் விகிதம் 180 குடும்பங்களுக்கு தேவையான விசேட உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன், அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள 152 குடும்பங்களுக்கும், அரியாலை கிழக்கு பகுதியில் உள்ள 46 குடும்பங்களுக்கும், ஏனைய சில பகுதிகளில் 07 குடும்பங்களுக்கும் விசேட உலர் உணவு பொதிகளும் 360 இறாத்தல் பாணும், 160 கிலோ இரதை வாழைப்பழமும் வழங்கப்பட்டன.
மேலும், அரியாலையில் உள்ள SOS சிறுவர் இல்லத்திற்கு 15 பிஸ்கற், சமபோஷா பைக்கற்றுக்களும் வழங்கப்பட்டன.
மொத்தமாக இன்றைய தினம் 385 விசேட உலர் உணவு பொதிகளும், 360 இறாத்தல் பாணும், 160 கிலோ இரதை வாழைப்பழமும், 15 பிஸ்கற் பைக்கற்றுக்களும் 101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா சார்பாக இலவசமாக வழங்கப்பட்டன.
விசேட உலர் உணவு பொதி ஒவ்வொன்றிலும் பச்சை அரிசி – 2 கிலோ, கௌப்பி – அரைக்கிலோ, கடலை – அரைக்கிலோ, பயறு – அரைக்கிலோ, சமபோஷா – 400 கிறாம், பிஸ்செற் – 400 கிறாம், சவர்க்காரம் – 2, பனடோல் – ஒரு காட் என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.
விசேட உலர் உணவு பொதி ஒன்றின் பெறுமதி அண்ணளவாக ரூபா. 1,250.00
இன்றைய தினம் வழங்கப்பட்ட
385 விசேட உலர் உணவு பொதிகளுக்கும் அரியாலை சமூக அபிவிருத்தி சங்கம் (ஐக்கிய இராட்சியம்) மற்றும், அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் கொடியேற்ற திருவிழா அன்னதான உபயகாரர்களாகிய இங்கிலாந்து வாழ் அரியாலை மகாமாரி அம்மன் அடியார்கள் ஆகியோர் நிதியுதவி வழங்கியிருந்தார்கள்.
மற்றும், 360 இறாத்தல் பாண், 160 கிலோ இரதை வாழைப்பழம் ஆகியவற்றிற்கு அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் முதலாம் திருவிழா உபாயகாரர்களான திரு. திருமதி. லக்சுமி தனபாலசிங்கம், மகள் செல்வி. தக்சனா தனபாலசிங்கம் ஆகியோர் நிதியுதவி வழங்கியிருந்தார்கள்.
101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா இன்றையதினம் நாட்டின் சூழ்நிலைக்கேற்பவும், அரியாலை மக்களின் தேவைக்கேற்பவும் சிறப்பான எடுத்துக்காட்டு நிகழ்வாக நடைபெற்றிருந்தது.